Thursday, October 11, 2007

இந்திய விஞ்ஞானிகளின் அறிவியல் மோசடி!!!!!

சுவீ டன் நாட்டு விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியின் முடிவுகளை நம் அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர். முனைவர். செல்லத்துரை உட்பட நான்கு பேர் சேர்ந்து ஒரு மாற்றமும் இல்லாமல் (ஈ - அடிச்சாங் காப்பினு சொல்லுவாங்களே!!!) வேறு ஒரு அறிவியல் பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளனர்.

இதில் சம்மந்தப்பட்டவர்களின் விபரம் :

1. கே. முத்துக்குமரன், அண்ணா பல்கலைக் கழகம் , சென்னை
2. ரோசன் பொகலவலெ , ஒக்லகோமா பல்கலைக் கழகம், நார்மன் ஐக்கிய அமெரிக்க நாடுகள்
3. டாம் மத்யுச் , இந்திரா காந்தி அணுமின் நிலையம், கல்பாக்கம்
4. செ. செல்லத்துரை, அண்ணா பல்கலைக் கழகம் , சென்னை


தலைப்பிலும் கட்டுரையிலும் சிறிய மாற்றமே செய்யப்பட்டுள்ளது. இதை அந்த பத்திரிக்கையும் வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் அதை பார்த்த அதன் உண்மையான உரிமையாளர்கள், அந்த பத்திரிக்கையில் புகார் தெரிவித்துள்ளனர்.


மேலும் விவரங்களுக்கு :
http://www.liu.se/en/news-and-events/News
http://horadecubitus.blogspot.com/2007/10/great-minds-think-alike.html#comment-716259335855921555
http://horadecubitus.blogspot.com/2007/10/translation-of-swedish-article-on.html


நேர்மை என்பது எல்லா விடயங்கலிலும் தேவையே!!

இப்படி அச்சு அசல் ஒத்திருக்கும் மோசடியை என்ன சொல்வது!!!




Wednesday, October 3, 2007

ஐன்ச்டீன் (ஐன்ஸ்டீன்) கடவுளைப் பற்றி என்ன சொல்கிறார்?



அல்பர்ட் ஐன்ச்டீன், இவர் தனது படைப்புகளின் மூலம், அறிவியலில் பெரும் திருப்பங்களை ஏற்ப்படுத்தியவர். இருபதாம் நூற்றாண்டின் பிரபலமான மனிதர்களுள் ஒருவர். 1921ஆம் ஆண்டு இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இவரைப் பற்றிய இந்த (அட்டைப் படம் - மேலே பார்க்க) புத்தகத்தை சமீபத்தில் படிக்க நேர்ந்தது,
ரொம்ப வித்தியாசமான மனிதராகவே இருந்திருக்கிறார். தனக்கு வரும் கடிதங்களுக்கு பதில் அளிக்கும் பழக்கமுடையவராக இருந்திருக்கிறார்.

அப்படி ஒரு கடிதமும் அதன் பதிலும் இங்கே:

ஒரு பள்ளி மாணவி தன் கடிதத்தில் கேட்ட கேள்வி: "விஞ்ஞானிகள் பிரார்த்தனை செய்வார்களா? செய்தால் என்ன வேண்டிக் கொள்வார்கள்?"


ஐன்ச்டீன் சொல்கிறார்:

என்னுடைய பதிலை என்னால் இயன்ற அளவு எளிமையாகத் தர முயற்சித்திருக்கிறேன். இது தான் என் பதில்:

இயற்கையின் விதிகளின் படி தான் ஒவ்வொரு செயலும் நடக்கும் என்ற எண்ணமே விஞ்ஞான ஆராய்ச்சிக்கு அடிப்படை. ஆகவே, இந்த விதி மனிதர்களின் செயல்களுக்கும் பொருந்தும். இந்தக் காரணத்தினாலேயே, செயல்களின் நிகழ்வை பிரார்த்தனை பாதிக்கும் (அ) மற்றும் என்ற கூற்றின் மீது, ஒரு ஆராய்ச்சி விஞ்ஞானி நம்பிக்கை வைப்பது மிகவும் அரிதே!! அதாவது, மனிதனுக்கு அப்பாற்பட்ட (கடவுள் என்று சொல்கிற) ஒன்றிற்கு வைக்கும் கோரிக்கை (வேண்டுதல்/ பிரார்த்தனை) மூலம் செயல்களின் நிகழ்வை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை ஒரு விஞ்ஞானிக்கு இருக்க வாய்ப்பில்லை!

இந்தபடியான இயற்கை விதிகளைப் பற்றிய நமது அறிவு, முழுமையற்றதாகவும், கோர்வையற்றதாகவுமே உள்ளது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அதனால், அனைத்து நிகழ்வுகளையும் விளக்கக்கூடிய இந்த விதிகளின் இருப்பை நம்புவதும் ஒருவித நம்பிக்கையே! ஆனால், இந்த நம்பிக்கை, விஞ்ஞான ஆராய்ச்சிகளின் மூலம் பெரிதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்னொரு புறம், இயற்கையின் இந்த விதிகளில் ஒரு சக்தி இருப்பது, அறிவியலில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் அனைவரும் ஒத்துக்கொள்ளக் கூடியதே! இந்த சக்தியானது, மனிதனின் ஆற்றலை விட மிக மேன்மையும் பலமும் வாய்ந்தது. இதன் முன், மனிதன் தன் அளவான சக்திகளுடன் மிக எளியவனாகவே உணரவேண்டும். இந்த வகையில் பார்த்தால், அறிவியலில் ஈடுபட்டிருப்பதுவும் ஒரு மதத்தைப் பின்பற்றுவது போல ஒரு உணர்ச்சியை ஏற்ப்படுத்தும், இந்த மதமானது ஒரு அறிவியல் அறியாத/சாராத மனிதனின் மதத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதே!!!

இந்தக் கருத்துக்களை அறிவியல் சார்ந்தவளாக, நான் ஏற்றுக்கொள்கிறேன். பள்ளிப் பருவம் முதல் பயிலும் அறிவியலின் மீது நம்பிக்கை இருக்கும் போது கடவுளையும் நம்பமுடியுமா?


உங்களின் கருத்துக்களைப் பதியுங்களேன்!

Friday, September 14, 2007

கடமைப்பட்டிருக்கிறேன்!!!!!




நீ என்னை ஏமாற்றினாய்
பெருங்கோபம் கொண்டேன்
என் மீது ... உன்னை நம்பியதற்காக

அந்த கோபத்தின் முன்
கழித்தல் குறியிட்டு இறங்கியிருக்கலாம்!
மேலே ஏறிவிட்டேன் கூட்டல் குறியிட்டு!!
வானத்தை தொடும் அளவிற்கு உயர்ந்து விட்டேன்!
கண்ணுக்குத் தெரியாத புள்ளி ஆகிவிட்டாய் நீ இன்று!

கடமைப்பட்டிருக்கிறேன் நண்பனே!
கடமைப்பட்டிருக்கிறேன்!
நீ என்னை ஏமாற்றியதற்காக
நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்!

Wednesday, August 8, 2007

மாற்றம்!!!!!

மாற்றம் தான் வாழ்வில் நிலையானது!!! மாற்றத்தைச் சந்திக்க தயாராகிறவன்தான் வாழ்வில் ஏற்றம் பெருகிறான் என்பதை நன்கறிந்திருந்தும் அதை நேரில் சந்திக்கும் பொழுது ஒரு அழுத்தம், மன-அழுத்தம்!!!

மனம் தன் சுகவாசத்தை விட்டுவிட தயக்கம் காட்டுகிறது!!
இன்னும் வாழ்க்கைப் போருக்கு தயாராகவில்லை என்பதற்கு
இது தான் அறிகுறியா???

மாற்றம் இல்லையேல் ஏற்றம் இல்லையே!
அன்னையின் மடியிலிருந்து வெளியே
முதல் மாற்றம் தொடங்கி
தந்தையின் கைகளிலிருந்து தொலைவில்
பள்ளிக்கூடத்திலிருந்து கல்லூரியில்
நண்பர்களைப் பிரிந்து தனியே
வாழ்க்கை புரிந்தது முதலே!
மாற்றம்! மாற்றம்! மாற்றமே!!
வாழ்க்கையில் நிலைப்பது மாற்றமே!!

Wednesday, June 13, 2007

எவன் நம்பத்தகுந்த மனிதன்?

எனக்கு மின்னஞ்சல்ல வந்த பல கதைகள்ல நான் மிகவும் ரசித்த கதை. என் நண்பர்களிடம் சொல்லி மகிழ்ந்த கதை. இப்போது பதிவுலக அன்பர்களுக்காக இங்கே!
__________

ஒரு அறிவாளி (உண்மையிலேயே) அந்நாட்டு இளவரசனைக் காண மூன்று பொம்மைகளுடன் சென்றார். இளவரசன் ஆச்சரியம் கலந்த பார்வையுடன் "என்னைப் பார்த்தால் பொம்மைகளுடன் விளையாடுபவன் போலவா உங்களுக்குத் தெரிகிறது?" என்று கேட்டான்.

அதற்கு அறிவாளி, இது ஒரு வருங்கால மன்னனுக்கான பரிசு, இதை கவனமாக பார்தீரானால் ஒவ்வொரு பொம்மையின் காதுகளிலும் ஒரு துவாரம் தெரியும் என்றார்.

அதற்கு, இளவரசன், "சரி! அதனால் என்ன?" என்றான்.

அறிவாளி, இளவரசனிடம் ஒரு மெல்லிய கம்பியை கொடுத்து, அதை ஒவ் பொம்மையின் காதுகளிலும் உள்ள துவாரத்தில் போட்டுப்பார்க்கச் சொன்னார்.

இளவரசனும், கம்பியை எடுத்து முதல் பொம்மையின் ஒரு காதில் போட, அது அந்த பொம்மையின் மற்றோரு காதுவழியே வெளியே வந்தது.

அப்போது அறிவாளி, இவர்கள் ஒரு வகை மனிதர்கள், இவர்களிடம் எதைச் சொன்னாலும் அடுத்த காதுவழியே வெளியே வந்துவிடும். இவர்கள் எதையும் உள்நிறுத்திக் கொள்ள மாட்டார்கள் என்றார். (அதாங்க ஒரு காதுல வாங்கி அடுத்த காதுல விடரது!)

இளவரசன், கம்பியை அடுத்த பொம்மையின் ஒரு காதில் போட, அது அந்த பொம்மையின் வாய்வழியே வெளியே வந்தது.

அப்போது அறிவாளி, இவர்கள் இரண்டாவது வகை மனிதர்கள், இவர்களிடம் எதைச் சொன்னாலும் அதை எல்லோரிடமும் சொல்லிவிடுவார்கள் என்றார். (அதாங்க ஓட்டவாயீனு சொல்லுவோமே!!)

இளவரசன் மூன்றாவது பொம்மையை எடுத்து அதன் ஒரு காதில் கம்பியை நுழைத்தான். அது வெளியே வரவேயில்லை.

திகைத்திருந்த இளவரசனிடம், அறிவாளி, இவர்கள் மூன்றாவது வகை மனிதர்கள், இவர்களிடம் எதைச் சொன்னாலும் அது அவருள்ளேயேதானிருக்கும். அது வெளியே வரவே வராது என்றார். (அவர்களை கல்லுலிமங்கன் என்பேன்! நீங்க என்ன சொல்லுவீங்க? )

இளவரசன் ஆர்வத்துடன் "இதில் எந்த வகை மனிதர்கள் சிறந்தவர்கள்?" என்றான்.

நிற்க!!
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்??????????

....

இந்த கேள்விக்குப் பதிலாக புன்னகையுடன் நான்காவதாக ஒரு பொம்மையைக்் கொடுத்தார் அறிவாளி.

இளவரசன், கம்பியை பொம்மையின் ஒரு காதில் போட (ரொம்ப நேரமா கம்பி விட்டிட்டு இருக்காரு பாருங்க பழக்கமாயிருச்சு!! :-)))), அது காதுவழியே வெளியே வந்தது.

மீண்டும் கம்பியைப் போடச்சொன்னார் அறிவாளி.

இந்த முறை கம்பி வாய்வழியே வெளியே வந்தது. மீண்டும் கம்பியை நுழைக்க அது வெளியே வரவேயில்லை.

"இவர்கள் தான் மிகச்சிறப்பான மனிதர்கள்" என்றார் அறிவாளி.

இப்ப என்னாங்க நினைக்கறீங்க????


அறிவாளி தொடர்ந்தார், "எவனொருவனுக்கு, எப்போழுது கேட்டவைகளை உள்நிறுத்தக் கூடாது என்றும், எப்போழுது கேட்டவைகளை வெளியே சொல்ல வேண்டுமென்றும், எப்போழுது கேட்டவைகளை உள்நிறுத்தி அமைதி காக்க வேண்டுமென்றும் தெரிகிறதோ, அவனே நம்பத்தகுந்த மனிதன்" என்றார்.

Monday, June 11, 2007

பெரியாரும் பாரதியாரும்.....



திரு.ஞானசேகரன் இயக்கத்தில் வெளிவந்த 'பெரியார்' படத்தைப் பார்த்தேன். இந்தப் படத்தைப் பற்றி நிறைய பதிவர்கள் தங்கள் கருத்துக்களைச் சொல்லியிருந்தனர். என்னைப் பொறுத்தவரை அந்தப் படத்தைப் பார்த்த பின்புதான் பெரியாரைப் பற்றித் தெரிந்து கொண்டேன். அதுவரைக்கும் ஏதோ வைக்கம் வீரர், தி.க என்றக் கட்சியைத் தோற்றுவித்தவர், கடவுள் இல்லை என்று சொன்னவர் என்ற அளவில் மட்டுமே தெரியும்.

படத்தைப் பார்த்ததிலிருந்து என் மனதில் ஒரே கேள்வி! பெரியார் 1879-ஆம் ஆண்டு பிறந்து 1973-ஆம் ஆண்டு வரை வாழ்ந்தவர். பாரதியாரோ 1882-ஆம் ஆண்டு பிறந்து 1921-ஆம் ஆண்டு வரை வாழ்ந்தவர். இவர்கள் இருவரும் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள்தானே? இவர்கள் ஒருவரைப் பற்றி ஒருவர் அறிந்திருந்தார்களா? இவர்கள் சந்தித்திருக்கிறார்களா? இவைகளை தவிறவும் இன்னோரு கேள்வி பாரதியாரைப் பற்றி நான் கேள்விப்பட்ட அளவிற்கு பெரியாரைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லையே என்பது தான்.

படத்தைப் பார்த்ததுக்குப் பிறகு பெரியாரைப் பற்றித் தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தில் அவரைப் பற்றி படித்தேன். அதில் 'தமிழச்சி' எழுதும் பதிவுகள் ரொம்பவே உபயோகமா இருந்திச்சு.

நான் தெரிந்துக்கொண்ட அளவில், பெரியாரும் சாதிகள் ஒழிய வேண்டும் என்று பாடுபட்டார். எல்லா சாதியிலும், உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற பாகுபாடின்றிப் பெண்கள் மிக இழிவாகவே நடத்தப்படுகிறார்கள் என்று சாடினார். சாடுதலோடு நின்றுவிடாமல் போராட்டம் செய்து அவை சட்டமாகும் அளவிற்கு காரணமாகவும் இருந்திருக்கிறார். உதாரணத்திற்கு பொட்டுக்கட்டுதல் என்ற வழக்கத்தை களைந்ததைச் சொல்லலாம்.

பாரதியாரும் இவ்வாறே தான் கூறுகிறார். உதாரணத்திற்கு "சாதிகள் இல்லையடிப் பாப்பா - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் ..." பெண்கள் இழிவைப் பற்றி : "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" என்பன.

விடயங்கள் இப்படியிருக்க, பாரதியாரைப் பற்றி தெரிந்த அளவிற்கு பெரியாரைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை. இதற்கு என்னுடைய பொது அறிவைக் குறை சொன்னாலும், என் பள்ளிப் பருவம் தொடங்கி இந்தப் படம் பார்க்கும் வரையில் என் ஆசிரியர்கள் மூலமோ அல்லது பொதுப்பேச்சாளர்கள் மூலமோ அல்லது ஊடகங்கள் மூலமோ நான் அவரைப் பற்றி அறிந்ததில்லை. ஒரிரு முறை என் தந்தையிடமிருந்து தி.க-காரர்கள் அப்படிச் செய்தார்கள், இப்படிச் செய்தார்கள் என்று அவர்களைப் பற்றி குறை மட்டும் கேட்டிருக்கின்றேன் அவ்வளவே!!!!

சிந்தித்துப் பார்த்தால் இவர்கள் இருவரிடையே இருந்த மிகப் பெரிய வேறுபாடு ஒன்றுதான். அது கடவுள் நம்பிக்கையே!! இதற்கும் நான் பெரியாரப் பற்றி அறியாதிருந்ததர்க்கும் என்ன சம்பந்தம் என்றுதானே கேட்கிறிர்கள்? இது தான் காரணமோ என்று எனக்குத் தோன்றுகிறது.

Sunday, June 10, 2007

பனி முகடு!

சமீபத்தில் கோலராடோ மாநிலம், கோலராடோ இச்பிரிங்ச் (Colarado Springs), என்ற இடத்துக்கு பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எடுத்த புகைப்படங்களும், என் எண்ணத்தில் தோன்றியவையும், இந்தப் பதிவில்.
______________________________________

கோலராடோ இச்பிரிங்ச், பைக்கிச் முகடு (Pikes Peak) : ஒரு தொடர்வண்டியின் (Pike's Peak Cog railway) மூலம் முகடின் உச்சிவரை போகமுடிந்தது. அதாவது 14,110 அடி வரை. போகிற வழிநெடிகிலும் அற்புதமான காட்சிகள். பனிப்பொழிவு வேறு அத்தனை காட்சிகளையும் இன்னும் அற்புதமாக்கிக் கொண்டிருந்தது.்ட்சொசத

முகடின் அடிவாரத்திலிருந்து கிளம்பும் பொழுது ரொம்ப பனி மூட்டமா இருந்திச்சுங்க, ஆனா உயரம் போக போக வானம் தெளிவாக, நல்ல புகைப்படங்கள் எடுக்க முடிஞ்சுது.

துளித்துளியாய் தெரியும் நீர் தொடர்வண்டியின் கண்ணாடியில் இருந்தது (உள்ளேயிருந்து எடுத்தது பாருங்க!! :-) ).

அப்படியே வானத்துக்குள்ளே போய்விடுவோம் போல தோனிச்சுங்க!!!!
வண்டியில் முதல் வரிசையில் இடம் கிடைத்ததும் படம் எடுக்க வசதியா இருந்திச்சு!



14,110 அடி வரை போனா, அங்க ஒரு உணவகம். நல்ல கொட்டிக்கிட்டு சந்தோசமா கீழே வந்தோம். அப்புறம், பக்கத்தில செவென் பால்ச் (Seven falls) என்ற இடத்துக்கு போனோம், போகறத்துக்கு முன்னாடி, அந்த இடத்தைப் பத்தி நிறைய கேள்விப்பட்டோம். நானும் நிறைய கற்பனையோட போனேன். ்்

அங்க போனப்புறம் தான் தெரிஞ்சுது, அருவி தரையில் வீழ்வதற்கு முன் ஏழு திட்டுக்களில் வீழ்கிறது என்பதினால் தான் அதற்கு செவென் பால்ச, அதாவது ஏழருவி என்று பெயர். நாங்கூட நம்ம குற்றாலம் ஐந்தருவி மாதிரின்னு நினச்சு ஏமாந்திட்டேன்.

மொத்தத்தில், ஒரு இனிய அனுபவமாக இருந்தது பயணம். வாய்ப்புக் கிடைத்தால் பார்க்க வேண்டிய இடம்.

இந்த இரண்டு இடங்களையும் பற்றி மேலும் விவரங்களுக்கு:

பைக்கிச் முகடு (Pikes Peak)-தொடர்வண்டி: http://www.cograilway.com/
செவென் பால்ச்(Seven falls): http://www.sevenfalls.com/



Friday, June 8, 2007

தமிழ் எழுத்து!

தமிழில் எழுதுவது என்னைப் பொருத்த வரையில் பன்னிரெண்டாம் வகுப்போடு நின்றுவிட்டது. ஆனால் தமிழில் எழுதுவது எனக்குப் பிடித்த விடயங்களில் ஒன்று.

நான் சின்ன வயசுல பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தப்போ, தமிழ் பாடம் அவ்வளவாக பிடிக்காது (247 எழுத்துக்கள் பாருங்க!!!, இதுவே ஆங்கிலம்னா 26 தானே!!). அப்புறம், வளர, வளர தமிழ் எனக்கு பிடித்த பாடங்களில் ஒன்னா ஆயிருச்சு. வீட்டுல படிக்கச் சொன்னா எப்பவும் தமிழ் புத்தகத்தோட தான் இருப்பேன். இந்த அளவிற்கு எனக்கு ஆர்வம் வர காரணம் என் தமிழாசிரியர்கள் என்றே நினைக்கிறேன். நேரம் போவது தெரியாமல் ஒரு மணிநேர வகுப்பு முழூவதும், ஒன்று அல்லது இரண்டு திருக்குறள்களுக்கு விளக்கம் சொன்ன காலமும் உண்டு. அதேசமயம், பத்தாம் வகுப்பில் செய்யுள் பகுதியில் வரும் கம்பராமாயணத்தின் விளக்கம் ஒரு மாதம் வரை நீடித்தது. கம்பராமாயணத்தில் வரும் அந்த பகுதியாவது: ராமன் வாலி மீது மறைத்திருந்து அம்பு எய்கிறான் - உயிர் போகும் நிலையில் வாலி கூறுவதுதான் அந்த பகுதி. அப்போது, கம்பராமாயணத்திற்கு "இச்டிக்கர்ராமாயணம்", "சவ்வுராமாயணம்" என்றெல்லாம் பட்டப்பெயர்.

கல்லூரி நாட்கள்ல, தமிழ் படிக்க அவசியம் குறைந்துபோனது (அது ஒரு பாடமா இல்லீங்க!!!). அப்புறமென்ன, அவ்வப்போது குமுதம், ஆனந்த விகிடன், .... படிப்பதோடு சரி.

இப்போ கொஞ்சநாளா, தமிழ்ப்பதிவுகள் நிறைய படிக்கப்போயி, பதிவர்கள் உதவியால கனிணியில் தமிழ் எழுதுவது சுலபம்னு தெரியப்போயி, அதை சோதனை செய்துபாத்து, வெற்றியடையப்போயி, நம்மழும் எழுதலாமேன்னு நினைகப்போயி, .............

ஒருவழியா எழுத ஆரம்பித்திட்டேன் :-)

link to web designers design guide
Get a free hit counter today.