எனக்கு மின்னஞ்சல்ல வந்த பல கதைகள்ல நான் மிகவும் ரசித்த கதை. என் நண்பர்களிடம் சொல்லி மகிழ்ந்த கதை. இப்போது பதிவுலக அன்பர்களுக்காக இங்கே!
__________
ஒரு அறிவாளி (உண்மையிலேயே) அந்நாட்டு இளவரசனைக் காண மூன்று பொம்மைகளுடன் சென்றார். இளவரசன் ஆச்சரியம் கலந்த பார்வையுடன் "என்னைப் பார்த்தால் பொம்மைகளுடன் விளையாடுபவன் போலவா உங்களுக்குத் தெரிகிறது?" என்று கேட்டான்.
அதற்கு அறிவாளி, இது ஒரு வருங்கால மன்னனுக்கான பரிசு, இதை கவனமாக பார்தீரானால் ஒவ்வொரு பொம்மையின் காதுகளிலும் ஒரு துவாரம் தெரியும் என்றார்.
அதற்கு, இளவரசன், "சரி! அதனால் என்ன?" என்றான்.
அறிவாளி, இளவரசனிடம் ஒரு மெல்லிய கம்பியை கொடுத்து, அதை ஒவ் பொம்மையின் காதுகளிலும் உள்ள துவாரத்தில் போட்டுப்பார்க்கச் சொன்னார்.
இளவரசனும், கம்பியை எடுத்து முதல் பொம்மையின் ஒரு காதில் போட, அது அந்த பொம்மையின் மற்றோரு காதுவழியே வெளியே வந்தது.
அப்போது அறிவாளி, இவர்கள் ஒரு வகை மனிதர்கள், இவர்களிடம் எதைச் சொன்னாலும் அடுத்த காதுவழியே வெளியே வந்துவிடும். இவர்கள் எதையும் உள்நிறுத்திக் கொள்ள மாட்டார்கள் என்றார். (அதாங்க ஒரு காதுல வாங்கி அடுத்த காதுல விடரது!)
இளவரசன், கம்பியை அடுத்த பொம்மையின் ஒரு காதில் போட, அது அந்த பொம்மையின் வாய்வழியே வெளியே வந்தது.
அப்போது அறிவாளி, இவர்கள் இரண்டாவது வகை மனிதர்கள், இவர்களிடம் எதைச் சொன்னாலும் அதை எல்லோரிடமும் சொல்லிவிடுவார்கள் என்றார். (அதாங்க ஓட்டவாயீனு சொல்லுவோமே!!)
இளவரசன் மூன்றாவது பொம்மையை எடுத்து அதன் ஒரு காதில் கம்பியை நுழைத்தான். அது வெளியே வரவேயில்லை.
திகைத்திருந்த இளவரசனிடம், அறிவாளி, இவர்கள் மூன்றாவது வகை மனிதர்கள், இவர்களிடம் எதைச் சொன்னாலும் அது அவருள்ளேயேதானிருக்கும். அது வெளியே வரவே வராது என்றார். (அவர்களை கல்லுலிமங்கன் என்பேன்! நீங்க என்ன சொல்லுவீங்க? )
இளவரசன் ஆர்வத்துடன் "இதில் எந்த வகை மனிதர்கள் சிறந்தவர்கள்?" என்றான்.
நிற்க!!
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்??????????
....
இந்த கேள்விக்குப் பதிலாக புன்னகையுடன் நான்காவதாக ஒரு பொம்மையைக்் கொடுத்தார் அறிவாளி.
இளவரசன், கம்பியை பொம்மையின் ஒரு காதில் போட (ரொம்ப நேரமா கம்பி விட்டிட்டு இருக்காரு பாருங்க பழக்கமாயிருச்சு!! :-)))), அது காதுவழியே வெளியே வந்தது.
மீண்டும் கம்பியைப் போடச்சொன்னார் அறிவாளி.
இந்த முறை கம்பி வாய்வழியே வெளியே வந்தது. மீண்டும் கம்பியை நுழைக்க அது வெளியே வரவேயில்லை.
"இவர்கள் தான் மிகச்சிறப்பான மனிதர்கள்" என்றார் அறிவாளி.
இப்ப என்னாங்க நினைக்கறீங்க????
அறிவாளி தொடர்ந்தார், "எவனொருவனுக்கு, எப்போழுது கேட்டவைகளை உள்நிறுத்தக் கூடாது என்றும், எப்போழுது கேட்டவைகளை வெளியே சொல்ல வேண்டுமென்றும், எப்போழுது கேட்டவைகளை உள்நிறுத்தி அமைதி காக்க வேண்டுமென்றும் தெரிகிறதோ, அவனே நம்பத்தகுந்த மனிதன்" என்றார்.