Monday, June 11, 2007

பெரியாரும் பாரதியாரும்.....



திரு.ஞானசேகரன் இயக்கத்தில் வெளிவந்த 'பெரியார்' படத்தைப் பார்த்தேன். இந்தப் படத்தைப் பற்றி நிறைய பதிவர்கள் தங்கள் கருத்துக்களைச் சொல்லியிருந்தனர். என்னைப் பொறுத்தவரை அந்தப் படத்தைப் பார்த்த பின்புதான் பெரியாரைப் பற்றித் தெரிந்து கொண்டேன். அதுவரைக்கும் ஏதோ வைக்கம் வீரர், தி.க என்றக் கட்சியைத் தோற்றுவித்தவர், கடவுள் இல்லை என்று சொன்னவர் என்ற அளவில் மட்டுமே தெரியும்.

படத்தைப் பார்த்ததிலிருந்து என் மனதில் ஒரே கேள்வி! பெரியார் 1879-ஆம் ஆண்டு பிறந்து 1973-ஆம் ஆண்டு வரை வாழ்ந்தவர். பாரதியாரோ 1882-ஆம் ஆண்டு பிறந்து 1921-ஆம் ஆண்டு வரை வாழ்ந்தவர். இவர்கள் இருவரும் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள்தானே? இவர்கள் ஒருவரைப் பற்றி ஒருவர் அறிந்திருந்தார்களா? இவர்கள் சந்தித்திருக்கிறார்களா? இவைகளை தவிறவும் இன்னோரு கேள்வி பாரதியாரைப் பற்றி நான் கேள்விப்பட்ட அளவிற்கு பெரியாரைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லையே என்பது தான்.

படத்தைப் பார்த்ததுக்குப் பிறகு பெரியாரைப் பற்றித் தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தில் அவரைப் பற்றி படித்தேன். அதில் 'தமிழச்சி' எழுதும் பதிவுகள் ரொம்பவே உபயோகமா இருந்திச்சு.

நான் தெரிந்துக்கொண்ட அளவில், பெரியாரும் சாதிகள் ஒழிய வேண்டும் என்று பாடுபட்டார். எல்லா சாதியிலும், உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற பாகுபாடின்றிப் பெண்கள் மிக இழிவாகவே நடத்தப்படுகிறார்கள் என்று சாடினார். சாடுதலோடு நின்றுவிடாமல் போராட்டம் செய்து அவை சட்டமாகும் அளவிற்கு காரணமாகவும் இருந்திருக்கிறார். உதாரணத்திற்கு பொட்டுக்கட்டுதல் என்ற வழக்கத்தை களைந்ததைச் சொல்லலாம்.

பாரதியாரும் இவ்வாறே தான் கூறுகிறார். உதாரணத்திற்கு "சாதிகள் இல்லையடிப் பாப்பா - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் ..." பெண்கள் இழிவைப் பற்றி : "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" என்பன.

விடயங்கள் இப்படியிருக்க, பாரதியாரைப் பற்றி தெரிந்த அளவிற்கு பெரியாரைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை. இதற்கு என்னுடைய பொது அறிவைக் குறை சொன்னாலும், என் பள்ளிப் பருவம் தொடங்கி இந்தப் படம் பார்க்கும் வரையில் என் ஆசிரியர்கள் மூலமோ அல்லது பொதுப்பேச்சாளர்கள் மூலமோ அல்லது ஊடகங்கள் மூலமோ நான் அவரைப் பற்றி அறிந்ததில்லை. ஒரிரு முறை என் தந்தையிடமிருந்து தி.க-காரர்கள் அப்படிச் செய்தார்கள், இப்படிச் செய்தார்கள் என்று அவர்களைப் பற்றி குறை மட்டும் கேட்டிருக்கின்றேன் அவ்வளவே!!!!

சிந்தித்துப் பார்த்தால் இவர்கள் இருவரிடையே இருந்த மிகப் பெரிய வேறுபாடு ஒன்றுதான். அது கடவுள் நம்பிக்கையே!! இதற்கும் நான் பெரியாரப் பற்றி அறியாதிருந்ததர்க்கும் என்ன சம்பந்தம் என்றுதானே கேட்கிறிர்கள்? இது தான் காரணமோ என்று எனக்குத் தோன்றுகிறது.

Sunday, June 10, 2007

பனி முகடு!

்

சமீபத்தில் கோலராடோ மாநிலம், கோலராடோ இச்பிரிங்ச் (Colarado Springs), என்ற இடத்துக்கு பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எடுத்த புகைப்படங்களும், என் எண்ணத்தில் தோன்றியவையும், இந்தப் பதிவில்.
______________________________________

கோலராடோ இச்பிரிங்ச், பைக்கிச் முகடு (Pikes Peak) : ஒரு தொடர்வண்டியின் (Pike's Peak Cog railway) மூலம் முகடின் உச்சிவரை போகமுடிந்தது. அதாவது 14,110 அடி வரை. போகிற வழிநெடிகிலும் அற்புதமான காட்சிகள். பனிப்பொழிவு வேறு அத்தனை காட்சிகளையும் இன்னும் அற்புதமாக்கிக் கொண்டிருந்தது.்ட்சொசத

முகடின் அடிவாரத்திலிருந்து கிளம்பும் பொழுது ரொம்ப பனி மூட்டமா இருந்திச்சுங்க, ஆனா உயரம் போக போக வானம் தெளிவாக, நல்ல புகைப்படங்கள் எடுக்க முடிஞ்சுது.

துளித்துளியாய் தெரியும் நீர் தொடர்வண்டியின் கண்ணாடியில் இருந்தது (உள்ளேயிருந்து எடுத்தது பாருங்க!! :-) ).

அப்படியே வானத்துக்குள்ளே போய்விடுவோம் போல தோனிச்சுங்க!!!!
வண்டியில் முதல் வரிசையில் இடம் கிடைத்ததும் படம் எடுக்க வசதியா இருந்திச்சு!



14,110 அடி வரை போனா, அங்க ஒரு உணவகம். நல்ல கொட்டிக்கிட்டு சந்தோசமா கீழே வந்தோம். அப்புறம், பக்கத்தில செவென் பால்ச் (Seven falls) என்ற இடத்துக்கு போனோம், போகறத்துக்கு முன்னாடி, அந்த இடத்தைப் பத்தி நிறைய கேள்விப்பட்டோம். நானும் நிறைய கற்பனையோட போனேன். ்்

அங்க போனப்புறம் தான் தெரிஞ்சுது, அருவி தரையில் வீழ்வதற்கு முன் ஏழு திட்டுக்களில் வீழ்கிறது என்பதினால் தான் அதற்கு செவென் பால்ச, அதாவது ஏழருவி என்று பெயர். நாங்கூட நம்ம குற்றாலம் ஐந்தருவி மாதிரின்னு நினச்சு ஏமாந்திட்டேன்.

மொத்தத்தில், ஒரு இனிய அனுபவமாக இருந்தது பயணம். வாய்ப்புக் கிடைத்தால் பார்க்க வேண்டிய இடம்.

இந்த இரண்டு இடங்களையும் பற்றி மேலும் விவரங்களுக்கு:
்
பைக்கிச் முகடு (Pikes Peak)-தொடர்வண்டி: http://www.cograilway.com/
செவென் பால்ச்(Seven falls): http://www.sevenfalls.com/



Friday, June 8, 2007

தமிழ் எழுத்து!

தமிழில் எழுதுவது என்னைப் பொருத்த வரையில் பன்னிரெண்டாம் வகுப்போடு நின்றுவிட்டது. ஆனால் தமிழில் எழுதுவது எனக்குப் பிடித்த விடயங்களில் ஒன்று.

நான் சின்ன வயசுல பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தப்போ, தமிழ் பாடம் அவ்வளவாக பிடிக்காது (247 எழுத்துக்கள் பாருங்க!!!, இதுவே ஆங்கிலம்னா 26 தானே!!). அப்புறம், வளர, வளர தமிழ் எனக்கு பிடித்த பாடங்களில் ஒன்னா ஆயிருச்சு. வீட்டுல படிக்கச் சொன்னா எப்பவும் தமிழ் புத்தகத்தோட தான் இருப்பேன். இந்த அளவிற்கு எனக்கு ஆர்வம் வர காரணம் என் தமிழாசிரியர்கள் என்றே நினைக்கிறேன். நேரம் போவது தெரியாமல் ஒரு மணிநேர வகுப்பு முழூவதும், ஒன்று அல்லது இரண்டு திருக்குறள்களுக்கு விளக்கம் சொன்ன காலமும் உண்டு. அதேசமயம், பத்தாம் வகுப்பில் செய்யுள் பகுதியில் வரும் கம்பராமாயணத்தின் விளக்கம் ஒரு மாதம் வரை நீடித்தது. கம்பராமாயணத்தில் வரும் அந்த பகுதியாவது: ராமன் வாலி மீது மறைத்திருந்து அம்பு எய்கிறான் - உயிர் போகும் நிலையில் வாலி கூறுவதுதான் அந்த பகுதி. அப்போது, கம்பராமாயணத்திற்கு "இச்டிக்கர்ராமாயணம்", "சவ்வுராமாயணம்" என்றெல்லாம் பட்டப்பெயர்.

கல்லூரி நாட்கள்ல, தமிழ் படிக்க அவசியம் குறைந்துபோனது (அது ஒரு பாடமா இல்லீங்க!!!). அப்புறமென்ன, அவ்வப்போது குமுதம், ஆனந்த விகிடன், .... படிப்பதோடு சரி.

இப்போ கொஞ்சநாளா, தமிழ்ப்பதிவுகள் நிறைய படிக்கப்போயி, பதிவர்கள் உதவியால கனிணியில் தமிழ் எழுதுவது சுலபம்னு தெரியப்போயி, அதை சோதனை செய்துபாத்து, வெற்றியடையப்போயி, நம்மழும் எழுதலாமேன்னு நினைகப்போயி, .............

ஒருவழியா எழுத ஆரம்பித்திட்டேன் :-)

link to web designers design guide
Get a free hit counter today.